சேலம் அருகே, மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரைச் சேர்ந்தவர் மோகன் (29). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சேலம் ஊரக டிஎஸ்பி உமாசங்கர் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலை நடப்பதற்கு முதல் நாள், திருச்செங்கோடை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் என்பவரும், அவருடைய நண்பர் ஒருவரும் மோகனை அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. கொலையுண்ட மோகன், தனியாக ரியல் எஸ்டேட் தொழில் தொடங்குவதற்கு முன்பாக சுரேஷிடம் தான் வேலை செய்து வந்துள்ளார். இதனால் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
இதையடுத்து, சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. காவல்துறை நெருங்குவதை அறிந்த சுரேஷ் திடீரென்று தலைமறைவானார். இதனால் அவருடைய கூட்டாளிகளுக்கு வலை விரித்தனர். இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த மாவீரன் என்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மோகன் கொலையில் சுரேஷூக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
கொலை நடந்த அன்று மோகனை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு சென்றுள்ளனர். பின்னர் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, குடிபோதையில் அவரை கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, சடலத்தை ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த கொலையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ், மாவீரன் மட்டுமின்றி சேலம் மாநகரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.