Skip to main content

அதற்கு ஏன் கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை? - கமல்ஹாசன்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

makkal needhi maiam president kamal haasan

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச் சுவர் நேற்று இரவு பெய்த ஒருநாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சுவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வெறும் 6 மாதங்கள்தான் ஆகின்றன. ஆறே மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும்போதே இடிந்து விழும் மருத்துவமனை, திறப்பு விழாவின் போதே நொறுங்கும் மினி கிளினிக் சுவர் என்று தொடரும் "டெண்டர் அரசின்" சாதனைப் பட்டியலில் கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது. ஆயிரம் ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஒரு வருடம் வாரண்டி இருக்கிறது. 

makkal needhi maiam president kamal haasan

 

கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை!? இ- டெண்டர்கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயம் என்ன? இந்தக் கட்டுமானங்கள் இடிந்து விழுந்த பின்னர் குத்தகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?! தண்டிக்கப்பட்ட அதிகாரிகள் எத்தனை பேர்?! அடிப்படை வசதிகளே சரியாக இல்லாத நகரத்தில், அழகுபடுத்தும் பணிகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் சுரண்டல்தான் என்பதன் சாட்சியே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்.

 

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களும் கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். போன பணம் போனதுதான் என்றாலும் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை உதவும்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்