கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி காவல்துறை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் என்பவர் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர். மேலும், வில்சனை கத்தியாலும் 6 இடங்களில் குத்தியுள்ளனர்.
அடுத்த 5 மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறைக்கே சவால் விடுவது போல் இருந்தது.
விசாரணையில், அப்துல் சமீம் (வயது 32), தவுபிக் (வயது 28) ஆகிய இருவர்தான் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை கர்நாடகா மாநிலம், உடுப்பியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மாநிலக் காவல்துறை மட்டுமின்றி என்.ஐ.ஏ. காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் மீதும் யு.ஏ.பி.ஏ. சட்டமும் பாய்ந்தது.
தற்போது அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில், உயர் பாதுகாப்புப் பிரிவில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நவ. 15 ஆம் தேதி இரவு அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை அறையில் இருந்து திறந்து விடப்பட்ட அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறைக்காவலர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
சிறை எஸ்.பி. தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினார். இருவரையும் எச்சரிக்கை செய்ததோடு, அவர்களை நேருக்கு நேராக உள்ள அறைகளில் இருந்து அப்புறப்படுத்தி, இருவரும் சந்தித்துக் கொள்ளாத வகையில் பின்பக்கமான அறைகளுக்கு இடமாற்றம் செய்தார். மேலும், சிறைக்குள் நடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் உறவினர்களைச் சந்திக்க 3 மாதங்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.