"நோய்த்தொற்றால் ஏற்பட்ட வலியால் உயிர் போகுது. அதனால் என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள்" என்று கூறி சேலம் சிறைக்கைதி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கணபதி (34). கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணபதி, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்றுப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கணபதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை சேலம் மத்திய சிறையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை (ஏப். 24) சிறைக்காவலர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
சிறுநீர் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால், கடந்த சில நாள்களாகக் கடும் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சைப் பணிகள் நடந்து வரும் நிலையில், கைதி கணபதிக்கு அறுவை சிகிச்சை தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே வாழ்வில் வெறுப்படைந்த கணபதி, நோயின் வலியாலும் துடித்து வந்துள்ளார். திடீரென்று அவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நோயுடன் தன்னால் வாழ முடியவில்லை. என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.