சென்னை உயர்நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இன்று (29/07/2022) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடந்தது? அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் பொதுக்குழுவில் எடுத்தனர் எனத் தெரிவித்தார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பில்லை என இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.
இதையடுத்து, ஜூலை 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்; அதுவரை தற்போதைய நிலை தொடரும்" எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.