கரோனா தொற்று அபாயம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்துவகை கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.
தற்போது ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இன்று (மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், பெரியார் பல்கலையில் பணியாற்றி வரும் அனைத்துத் துறை பேராசிரியர்களுடன் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது, நடத்தி முடிக்கப்படாத பாடங்களை நடத்தி முடிப்பது, பல்கலையின் வளர்ச்சி, ஒருவேளை, பல்கலைகள் திறக்கப்பட்டால் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து காணொலி மூலம் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.
இதற்காக அனைத்துத்துறை பேராசிரியர்களும், தங்களது செல்போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'கூகுள் மீட்' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் திங்கள் கிழமை (மே 4) காலை 10.45 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது.