தொடர் மழையால் சேலம் சுற்றுவட்டாரத்தில் நெல் நாற்று நடவுப்பணிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
நடப்பு ஆண்டில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை ஓரளவு நன்றாக கைகொடுத்துள்ளதுடன், தற்போது வடகிழக்கு பருவமழையும் சராசரி அளவை நெருங்கி உள்ளது. இதையடுத்து, சேலம் சுற்றுவட்டாரங்களில் வயல்களில் நெல் நாற்று நடவுப்பணிகள் சுறுசுறுப்பு இடைந்துள்ளன. சேலத்தை அடுத்த புது ரே £டு, தளவாய்ப்பட்டி, கேஆர் தோப்பூர், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்று நடவுப்பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புது ரோடு அருகே விவசாயி ரத்தினசாமி என்பவருக்குச் சொந்தமான வயல்களில் பெண் கூலித்தொ-ழிலாளர்கள் சிலர் நாற்று நடவுப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வயலின் மற்றொரு புறத்தில், டிராக்டர் மூலம் வயலில் ஏர் உழவுப்பணிகளும் நடந்து கொண்டிருந்தது. நெல் பயிர்களை ஒரு சதுரடி இடைவெளியில் நடவு செய்தனர்.
''இந்த வருஷம் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது. போன மாதமே நடவுப்பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், மழையால் வயலில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதனால் நடவுப்பணிகள் தாமதம் ஆனது. இப்போது பொன்னி நெட்டை ரக பயிர்களை நடவு செய்து வருகிறோம். இந்த ரக பயிர்கள், நடப்பு ஐப்பசி மாத கடைசியில் நடவு செய்தால் அடுத்த 90 நாள்களில் அதாவது தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகி விடும்,'' என்கிறார் நாற்று நடவு செய்து வரும் முனியம்மாள்.
பொன்னி நெட்டை ரக பயிர்கள் நாற்று நடவுக்கு முன்பாகவே, ஒரு மாதம் வரை நாற்றங்கால் விடப்படுகிறது. செம்மை நெல் ரகம் போல் அல்லாமல், ஒரு குத்துக்கு மூன்று நான்கு பயிர்கள் வீதம் நடுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடிய பயிர் ரகம் இது. களை எடுப்பு மற்றும் உரமிடும் பணிகளுக்கு வசதியாக ஒவ்வொரு குத்துக்கும் ஓர் அடி இடைவெளிவிட்டு பயிர் நடவு செய்கின்றனர்.
இதற்காக வயலின் இரு வரப்புகளையும் இணைக்கும் வகையில் நீளமான நூல் கயிறை இருபுறமும் குச்சிகளில் கட்டி, ஓர் அடி தூரம் அளவெடுத்து, பயிர் நடுகின்றனர். கண் மதிப்பாக பயிர் நடும்போது குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் பயிர் நடவை செய்து விடுகிறார்கள். ஆனால் கயிறு மூலம் அளவெடுத்து, அதன்படி பயிர் நடும்போது அதிக நேரம் பிடிக்கிறது என்கிறார்கள்.
நெற்பயிர் நடவு, களைப்பறித்தல் போன்ற விவசாய வேலைகளுக்கு கூலி ஆள்களை அனுப்பி வைப்பதற்கும் இப்போது ஒப்பந்ததாரர்கள் வந்துவிட்டார்கள் என்கிறார், முனியம்மாள்.
அவர் மேலும் கூறுகையில், ''நெல் பயிர் நடவு வேலைக்கு, ஒரு நாளைக்கு 300 ரூபாய் கூலி கொடுக்கின்றனர். ஒரு வயலை ஒப்பந்தம் பேசியும் நடவு வேலைகளைச் செய்யலாம். இதுபோல் கூலி அடிப்படையிலும் வேலை செய்யலாம். எங்களை இந்த வேலைக்கு ஒரு ஒப்பந்ததாரர் அனுப்பி வைத்தார். அவருக்கு இந்தப்பணிகள் மூலம் எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரங்கள் தெரியாது.
ஆனாலும் எங்களைப்போன்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இப்போது கொடுக்கின்ற கூலி போதுமானதாக இல்லை. வேலைக்கு வரும்போதே மதிய உணவையும் கொண்டு வந்து விடுவோம். வேலைக்குச் செல்லும் இடத்தில் அந்தந்த தோடக்க உரிமையாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு நேரம் டீயுடன் பலகாரம் அல்லது பிஸ்கட் போன்றவையும் கொடுப்பார்கள்,'' என்றார்.
நம்மிடம் பேசிக்கொண்டே பயிர் நடவில் தீவிரம் காட்டினார்கள், பெண் தொழிலாளர்கள்.