
கஞ்சா வழக்கில் சிறை தண்டனை கொடுத்த நீதிபதிக்கு குற்றவாளிகள் நீதிமன்ற வளாகத்திலேயே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
கடந்த 2024 ஆம் ஆண்டு மதுரை மாநகர் வில்லாபுரம் அருகே கருவேலங்காட்டுக்குள் இளைஞர்கள் சிலர் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் வெள்ளை சாக்குடன் நின்றுகொண்டிருந்த முரட்டாம்பத்திரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா அகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் 25 கிலோ உலர்ந்த கஞ்சாவை பதிக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மூன்று பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய பொழுது பிரபல ரவுடியான வெள்ளை காளியின் அண்ணன் மகன் சண்முகவேல் இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்கும் படி கொடுத்ததாக கூறியுள்ளனர். சண்முகவேல் திருச்சியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரிந்தது. கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததும் தெரிந்தது. இந்த வழக்கில் பாண்டியராஜன், பிரசாந்த் மற்றும் பாண்டியராஜன் சரண்யா மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
இன்று (24/04/2025) வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகள் முடிந்து நீதிபதி ஹரிகரகுமார் தீர்ப்பு வழங்கினார். 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பண்டியராஜன், பிரசாத் மற்றும் பாண்டியராஜன் சரண்யா ஆகிய மூன்று பேருக்கும் தலா 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவைக் கேட்டு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் நீதிபதிக்கே கொலை மிரட்டல் விட்டனர்.
நீதிமன்றத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்து ரத்தம் சொட்ட சொட்ட ஆத்திரமாக பேசினர். ''கிளாமர் காளி வழக்கில் எதற்காக சுபாஷ் சந்திரபோஸை என்கவுண்டர் செய்தீர்கள்' என்றதோடு, ''நாங்கள் வெள்ளை காளியின் பசங்க. நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்'' என ஆபாச வார்த்தைகளால் திட்டி கூறி மிரட்டல் விட்ட இந்த சம்பவத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
உடனடியாக போலீசார் அவர்களை கட்டிப்போட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிபதிக்கு விடுக்கப்பட்ட இந்த பகீர் கொலை மிரட்டல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.