சேலம் அருகே, அரசுப்பள்ளியில் மதுபானங்கள் வாங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அபாயம் காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வரும் 17ம் தேதி வரை அமலில் இருக்கும். இதையொட்டி அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் 43 நாள்களாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை (மே 7) திறக்கப்பட்டன. மதுபானங்கள் வாங்க டோக்கன் முறை கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது வாங்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முண்டியடித்தனர். நெரிசலை தவிர்ப்பதற்காக அருகில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து மது பிரியர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
மது பிரியர்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்றுச்சென்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் டோக்கன் விநியோகம் செய்தனர். மதுபானங்களுக்காக பள்ளிக்கூடத்தில் டோக்கன் விநியோகம் செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனிடம் கேட்டபோது, ''காமலாபுரம் டாஸ்மாக் கடையில் மது வாங்க ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து டோக்கன் விநியோகம் செய்யும் அளவுக்கு அங்கே இடவசதி இல்லாததால், அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் வைத்து டோக்கன் வழங்கலாம் என காவல்துறையினர்தான் அதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். டோக்கன் மட்டும்தான் அங்கே விநியோகம் செய்யப்பட்டது,'' என்றார்.
இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''டாஸ்மாக் மதுபானத்திற்காக அரசுப்பள்ளியில் டோக்கன் வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.