சென்னையில் தொடங்கிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' எனும் நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கும் படர்ந்து தற்பொழுது ஒவ்வொரு மாவட்டமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சேலத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக காலை 5 மணியிலிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் இளைஞர்கள் குவியத் தொடங்கினர். நிகழ்ச்சி களைக் கட்டியது ஒரு பக்கம் இருக்க, வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிறுத்தப்பட்டதால் ஒட்டுமொத்த அஸ்தம்பட்டியே நெரிசலால் திணறியது.
பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் கார் ஒன்றை ஓரிடத்திலிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் மற்ற போக்குவரத்து நெரிசல்களை போலீசாரால் சீர் செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது ஒன்று கூட வைத்தல், சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல், மின்சாதன பொருட்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது அஸ்தம்பட்டி போலீஸ்.