சேலம் அருகே, அரசுப்பள்ளியில் குடிபோதையில் வகுப்பறையில் படுத்துத் தூங்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பதினைந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இருதயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், அறிவழகன் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் அறிவழகன், ஒழுங்காக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். அடிக்கடி முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்து வந்துள்ளதோடு, குடிபோதையில் பள்ளிக்கு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. குழந்தைகளின் பெற்றோர்களிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 28) சங்ககிரியில் தொடக்கக்கல்வித்துறை சார்பில் நடந்த ஒரு பயிற்சி முகாமில், கலந்து கொள்வதற்காக தலைமை ஆசிரியர் இருதயராஜ் சென்று விட்டார். அதனால் பள்ளியில் ஆசிரியர் அறிவழகன் மட்டுமே இருந்தார்.
திடீரென்று பள்ளியில் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு, வெளியே சென்ற அறிவழகன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அப்போது அவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்துள்ளார். மேலும், போதை தலைக்கேறிய நிலையில் வகுப்பறையிலேயே குறட்டை விட்டு தூங்கினார். இதுகுறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள், உள்ளூர்க்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பயிற்சி முகாமிற்கு சென்றிருந்த தலைமை ஆசிரியருக்கும் தகவல் அளித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர் நெடுமாறனிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் அறிவழகன், இடைப்பாடி அரசு மருத்துவமனை அழைத்துச்சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர், மது அருந்தி இருப்பது ஊர்ஜிதமானது. இதுபற்றி சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் ராமசாமியிடம், வட்டாரக் கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில், ஆசிரியர் அறிவழகன் உடனடியாக பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.
இதுகுறித்து தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அரசு தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரமான பாடத்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள், இலவச சீருடை, காலணி உள்ளிட்ட பதினான்கு வகையான இலவச பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஆசிரியர் அறிவழகன் போன்ற ஒழுக்கம் தவறிய ஆசிரியர்களால் ஒட்டுமொத்த தொடக்கக் கல்வித்துறைக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. தற்போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் சிறுசேமிப்பு பணத்தை எடுத்துச்சென்று அவர் மது அருந்தியதாக புகார் சொல்லப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.