சேலம் மாநகர பகுதிகளில் பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்த 1.26 லட்சம் பேரிடம் இருந்து இதுவரை 1.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் மாநகர பகுதிகளில் பொது வெளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவைக் கண்காணிக்க சிறப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இக்குழுவினர் மேற்கொண்ட தணிக்கையின்போது இதுவரை 1.26 லட்சம் பேரிடம் இருந்து 1.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பொதுவெளிகளில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கரோனா தொற்று நோயில் இருந்து தங்களையும், தங்களின் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் தொற்று நோய்த்தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.