Skip to main content

“ஏழைத் தாயின் மகன் கொண்டுவந்தார்; விவசாயி மகன் ஆதரிக்கிறார்!” - சேலத்தில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

salem DMK support farmers MK Stalin speech


"விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பிராயசித்தம் தேடிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் லாஸ்ட் சான்ஸ். இல்லையென்றால், டேஷ்... டேஷ்..." என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வரைக் கடுமையாகச் சாடினார். 


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் தி.மு.க சார்பில், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் சேலத்தில் சனிக்கிழமை (டிச.5) நடந்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். 


அப்போது அவர் பேசியதாவது, "தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும், அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துச் சொல்லும் வகையிலும் இன்று தி.மு.க சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால், இந்தப் போராட்டத்திற்கு திமுகவினர் அதிகளவில் கலந்து கொண்டு விடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் கட்சித் தொண்டர்களை ஆங்காங்கே கைது செய்து வருகின்றனர். 


எங்களுடைய போராட்டம் என்பது அரசியல் நோக்கத்திற்காகவோ, சொந்தப் பிரச்னைக்காகவோ இல்லை. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கானது என்பதை ஆளுங்கட்சியினர் புரிந்து கொண்டாக வேண்டும். தி.மு.க, விரைவில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. 


வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு, உடனடியாக அழைத்துப் பேசி ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டெல்லி போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அசைக்க முடியாத பாஜகவையே அசைத்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். 

 

விவசாயிகளை மதிக்காமல், ஜனநாயகத்தை மதிக்காமல், நாடாளுமன்றத்தின் நெறிமுகறைகளைச் சிந்தித்துப் பார்க்காமல், தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஆணவத்திலேயே எதைப் பற்றியும் கவலைப்படாமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு. இன்றைக்கு பாஜகவை நோக்கி விவசாயிகள் போர் தொடுக்கிறார்கள். 


'நான் ஏழைத்தாயின் மகன்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் மோடி. ஏழைத் தாயின் பிள்ளைகள் வீதிக்கு வந்து போராடும் சூழல் பிரதமருக்குத் தெரியாதா? இந்தச் சட்டங்களால் ஏராளமான நன்மை இருக்கிறது என்று பேசுகிறார் பிரதமர். என்னென்ன நன்மை என்று சொல்ல முடியுமா? விவசாயிகள் உற்பத்திச் செய்யக்கூடிய பொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதா? பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்தில், எந்த இடத்திலாவது குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறதா? 


தொடர் போராட்டங்கள் காரணமாக விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என பிரதமர் இப்போது கூறியிருக்கிறார். வெறும் வார்த்தையாக இல்லாமல் அந்த உத்தரவாதத்தை ஏன் சட்டமாகக் கொண்டு வரவில்லை? பிரதமரின் வாக்குறுதியை மட்டுமே நம்பி, யாராவது விளை பொருள்களுக்குக் குறைந்தபட்ச விலையைத் தருவார்களா? 


ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்றார் மோடி. ஆனால், விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த வருமானமும் போய்விட்டது என்பதுதான் உண்மை. விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்போம் என்றார் மோடி. கடந்த ஆண்டு மட்டும் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆண்டுக்கு பத்தாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவோம் என்று உறுதிமொழி தந்தார். ஆட்சிக்கு வந்த பின்னர், சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மோடியின் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் வாக்களித்தனர். அதற்கு மோடி தந்த பரிசு, விவசாயிகள் துரோக மூன்று வேளாண் சட்டங்கள்தான்.

 

ஏழை விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களை ஓர் ஏழைத்தாயின் மகன் கொண்டு வந்தார். ஆனால், விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை, 'விவசாயி மகன்' என்று சொல்லிவரும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். இதுதான், இந்த நாட்டில் நடக்கக்கூடிய பெரிய கொடுமை. வறுமை பற்றி தெரியாத பிரதமர், சட்டம் கொண்டு வந்தார்; விவசாயத்தைப் பற்றி தெரியாத முதல்வர் ஆதரிக்கிறார். இதை எப்படி விட்டு விட முடியும்? தன்னை விவசாயி மகன் என்று ஊர் பூராவும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.


கடந்த 3ஆம் தேதி எடப்பாடி பனிசாமி, இந்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? என்று ஏதோ அதிபுத்திசாலி போலக் கேட்டிருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் யாருக்கு பாதிப்பு என்று அவர் கேள்வி கேட்கிறார். இது துப்பாக்கி. சுட்டால் மரணம் ஏற்படும். இது கத்தி. குத்தினால் ரத்தம் வரும். ஆனால், சுடுவதற்கு முன்னால் அவன் சாகவில்லையே... குத்துவதற்கு முன்னால் ரத்தம் வரவில்லையே என்று விவரம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி உளறிக்கொண்டு இருக்கிறார். 
 

cnc


விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று எதையும் இந்தச் சட்டத்தில் சொல்லவில்லை. விவசாயிகள் என்ன விளைவிக்கலாம்? யாருக்கு என்ன விலைக்கு விற்கலாம்? என்று தீர்மானிக்கக் கூடிய உரிமை, சுதந்திரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம்  வழங்குகிறது. தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, பெரிய வியாபாரிகள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு விவசாயிகளை அடிமையாக்குகிறது இந்தச் சட்டம். 


நேரடி கொள்முதல் நிலையங்கள், இந்திய உணவுக் கழகங்கள் இனி இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். உழவர் சந்தைகள், ரேஷன் கடைகளை இனி அனுமதிக்க மாட்டார்கள். சிறுகுறு விவசாயிகள் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குளிர்பதனக் கிடங்கு இல்லாதவர்கள். அந்த வசதி இருப்பவர்களிடம் விவசாயம் சென்றுவிடும். ஏற்கனவே கரும்பாலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு ஆண்டுக்கணக்கில் பணம் வாங்க முடியாமல் கரும்பு விவசாயிகள் தவித்துக் கொண்டுள்ளனர். அதே நிலையை எல்லா விவசாயிகளுக்கும் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதனால்தான் விவசாயிகளும் நாமும் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.


கரோனா காலத்தில் எதற்காக இந்த அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்? வேளாண்மை பற்றி மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று சட்டத்தில் இருக்கிறது. இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு, கடன் தள்ளுபடி, உர மானியம், இடுபொருள் விநியோகம், நிதியுதவி உண்டா? விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி உண்டா? வேலை உத்தரவாதம் உண்டா? எதுவும் கிடையாது. 


இது எதற்கும் பதில் சொல்ல முடியாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் வியாபாரிகள், விவசாயிகளைத் தூண்டிவிடுவதாக சேலத்து விஞ்ஞானி எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பை டெல்லிக்குச் சென்று சொல்லக்கூடிய தெம்பு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? விளை பொருள்களை இந்தியா முழுவதும் கொண்டு போய் விற்றுக் கொள்ளலாம் என்று பெரிய கண்டுபிடிப்பு போல சொல்லி இருக்கிறாரே? எடப்பாடியில் விளைவிக்கப்படும் தக்காளியை அதிக விலைக்காக பஞ்சாப் போய் விற்பாரா? ஊர் பூராவும் போய் உளறிக்கொண்டு இருக்கிறார். 


எடப்பாடி பழனிசாமி மீது நாம் ஊழல் புகார்களை அம்பலப்படுத்தி வருகிறோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பேசுகிறார். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்று உங்களுக்குத் தெரியும். மண்டி போட்டு, ஊர்ந்து போய், தவழ்ந்து போய் முதல்வர் ஆனவர். நேரடியாக மக்களைச் சந்தித்து முதல்வர் ஆகியிருந்தால் நான் வரவேற்று இருப்பேன். அவர் தன்னுடைய ஊழலை மறைக்க பேட்டி கொடுக்கிறார். அவருடைய ஊழலை மறைப்பதற்காக 2ஜியாம்... சர்க்காரியா கமிஷனாம்... எம்ஜியாரே பார்த்துப் போட்ட வழக்கு அது. அவரே, நான் சொல்லவில்லை. சேலம் கண்ணன் சொன்னது என்று சொல்லிவிட்டார். 


2ஜி வழக்கு என்னாச்சு? அவர் கொடுத்த பேட்டிக்கு, இரண்டு நாளைக்கு முன்பு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறைக்குப் போனதுதான் உங்கள் வரலாறு. மூன்று நாள் அவகாசம் கேட்டார். எங்கள் மீதான வழக்குகளில் நாங்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறோம். இதுவரை எந்தப் புகார்களும் நிரூபிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரங்களுடன் தன்னந்தனியாக வருகிறேன் என்று சொடக்குப் போட்டுக் கேட்டாரே...?

 

ஆதாரங்கள் கொடுக்கும்படி சொல்லும் பழனிசாமியை நான் கேட்கிறேன்... வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை இருப்பதாகச் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தை எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. அதனால்தான் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். கம்பெனிகளுடன் விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்கிறார் எடப்பாடி. அந்த ஒப்பந்தம் மீறப்பட்டால் நீதிமன்றம் போக முடியாது என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சிக்க மாட்டார். ஏனெனில் அவர் விவசாயி அல்ல; அவர் ஒரு வேடதாரி. 


இதே மூன்று வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உடனே தி.மு.க கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கடந்த செப். 18ஆம் தேதி கூட்டினோம். வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் போட்டோம். அப்போது கரோனா கடுமையாக இருந்த காலம். காஞ்சிபுரம் போராட்டத்தில் பங்கேற்றேன். வேளாண் சட்டத்திற்கு எதிராக கேரள மாநிலம், நீதிமன்றம் சென்றிருந்தது. தமிழக அரசும் வழக்குப்போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இல்லை என்றால் தி.மு.க உயர்நீதிமன்றம் செல்லும் என்றும் கூறினேன்.


அதன்பிறகு திருச்சி சிவா எம்.பி மூலமாக வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரகிறது. ஆனால், விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் பழனிசாமி, மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நானும் ரவுடிதான்... நானும் விவசாயிதான்... என்று நாள்தோறும் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அவரால் விவசாயிகளுக்குப் பயனில்லை. அவரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. 


டெல்லியிலும், தமிழகத்திலும் நடந்து வரும் போராட்டங்களைப் பார்த்த பிறகாவது, நீங்கள் செய்த துரோகத்திற்குப் பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள். இதுதான், லாஸ்ட் சான்ஸ் உங்களுக்கு. ஏனெனில், ஆட்சி மாறப்போகுது. அமித்ஷா சொன்னாரோ இல்லையோ முந்திக்கொண்டு தன் மீதான வழக்குகளுக்குப் பயந்து கொண்டு, பி.ஜே.பி உடன்தான் கூட்டணி என்று சொன்னீர்களே... அவர்களிடம் வற்புறுத்துங்கள். உடனடியாகச் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். இதைச் செய்தால் பாவமன்னிப்பு. இல்லை என்றால் அவ்வளவுதான்.
 

nkn


விவசாயிகளையும், கிராமங்களையும் சிதைக்கிற சட்டங்களைத்தான் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதை அப்படியே அனுமதிக்க முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நேற்று பிரதமர், கரோனா பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் நம்முடைய மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் விவசாயிகள் பிரச்னை பற்றி பிரதமர் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்களைப் பேச விடாமல் தடுக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடர வேண்டும். விவசாயிகளை அழைத்துப் பேசி பிரதமர் சமரச முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். 


நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஜனநாயகத்திற்குக் கட்டுப்பட்ட ஆட்சி இது என்பதை, இதன் மூலம் நிரூபித்தாக வேண்டும். ஏழைத்தாயின் மகன் என்பது உண்மையென்றால், பிரதமர் மோடி இந்த காரியத்தைச் செய்யுங்கள். இல்லை என்றால், அதுவரை இந்தியாவில் நடக்கும் இந்தப் போராட்டத்துக்கு, தி.மு.க என்றைக்கும் ஆதரவாகத் துணை நிற்கும். தி.மு.க தொடர்ந்து போராடும்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.