Skip to main content

"நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா?" - மத்திய அரசை தமிழில் விளாசிய ஜோதிமணி எம்.பி!

Published on 11/08/2021 | Edited on 12/08/2021

 

Asathiya Jyotimani MP speaking in Tamil in the Lok Sabha!

 

நாடாளுமன்றத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க மாநிலங்களுக்கு உரிமை வழங்கும் 127- வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (11/08/2021) நடைபெற்றது. 

 

இந்த விவாதத்தில் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்றுப் பேசினார். அவர் மக்களவையில் கூறியதாவது, "அவை தலைவருக்கு வணக்கம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மாநில அரசுகளின் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு திருத்த முன்வரைவை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பாஜகவையும், நரேந்திர மோடியையும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் காக்க வந்த ரட்சகர்களாக நீங்கள் பறைசாற்றுகிறீர்கள். மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டபோது, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் துடைப்பத்தோடு வீதியில் வேலை செய்ய வேண்டியவர்கள் எல்லாம் படித்து பட்டம் பெற்று அதிகாரத்தை அலங்கரித்து விடுவார்கள் என்று அவதூறு செய்தது யார்? துடைப்பத்தோடு வீதி வீதியாக ஊர்வலம் போனது யார்? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தது யார்? நீங்கள் அல்லவா, நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா? ஒன்றிய அரசின் அமைச்சர் அவர்கள் மசோதாவைத் தாக்கல் செய்யும் பொழுது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வியில் உயர் கல்வி உள்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நரேந்திர மோடி அவர்களின் தயவில் ஓ.பி.சி. மாணவர்கள் பெற்றது போல ஒரு சித்திரத்தை முன் வைத்தார். 

 

அதன் பின் உள்ள உண்மையை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இத்துடன் தமிழகத்தில் பெருமை மிகு சமூக நீதி வரலாற்றையும் இந்த அரசுக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தியாவின் முதல் அரசியல் சாசனத் சட்டத் திருத்தம் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் தனது மகத்தான சாதனைகளுக்காக உங்களால் தினந்தோறும் வெறுக்கப்படும் நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு, முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அன்று துவங்கி தமிழகத்தின் தனித்துவமான 69% இட ஒதுக்கீடு கொள்கையை நாங்கள் காலம் காலமாக நிலை நிறுத்தி வருகிறோம் என்பதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த பாரம்பரியத்தையொட்டி இன்று மருத்துவக் கல்வியில் 27% சதவீத ஒதுக்கீட்டை தமிழகமே போராடி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்திய வரலாறு. ஆனால், இதனை பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையாக வழக்கம் போல் பறைசாற்றி வருகிறீர்கள். 

 

பொய்களையும், பாஜகவையும் பிரிக்க முடியாது. உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மருத்துவக் கல்லூரியில் ஓ.பி.சி.களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது நரேந்திர மோடியின் அரசு என்பது இந்த நாடு மறுக்காது. எத்தனை வருடங்களாக நீங்கள் இந்திரா காந்தி வழக்கைக் காரணம் காட்டி ஓ.பி.சி. மக்களுக்கு வரலாற்று ரீதியாக அநீதி இழைத்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்; இந்த நாடும் அறிவோம். தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூகநீதிக்கான அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக சென்னை உயர்நீதிமன்றம் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அனைத்தும் மருத்துவச் சேர்க்கைக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கியது. 

 

அந்த தீர்ப்புக்கு பின்பாவது பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களா? இல்லை, அதற்கும் நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டியிருந்தது. சமூக நீதிக்கான தமிழகத்தின் சமரசமற்றப் போராட்டத்தின் விளைவாகவே மருத்துவக் கல்லூரியில் 27% இட ஒதுக்கீடு சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதிலும், தமிழகத்திற்கு 23% இட ஒதுக்கீடு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏனென்றால், தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடும், தலித்துகளுக்கு 18% இட ஒதுக்கீடும், மக்கள் தொகையில் குறைவாக உள்ள மலைவாழ் மக்களுக்கு 1% இட ஒதுக்கீடும் அமல்படுத்தப்படுகிறது. 

 

50% பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு காலம் காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தெளிவாகப் பதிலளிக்காமல் ஒன்றிய அரசு மழுப்பி வருகிறது என்பது தான் உண்மை. இதனைத் தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை ஒன்றிய அரசு காரணம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசு 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் அதை மீறிய பிறகு, ஏன் மாநிலங்கள் 50%-க்கும் மேற்பட்ட இட ஒதுக்கீட்டை மாநிலங்கள் வழங்கக் கூடாது என்பதை மக்கள் மன்றத்தில் இந்த அரசு பதிவு செய்ய வேண்டும். 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவதற்காக, இதேபோல அரசியல் சாசனத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் இந்த அரசாங்கம் நீலிக்கண்ணீர் வடிக்காமல் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் ஆதரவாக இருக்கிறது என்ற பிம்பத்தையாவது உங்களால் ஏற்படுத்த முடியும். 

 

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு சமூக நீதிக்கான 69% இட ஒதுக்கீடே காரணம் என்பதை உறுதியோடும், பெருமையோடும் எங்களால் இங்கே சொல்ல முடியும். சமூக நீதிக்கான சமரசமற்ற போராட்டத்தில் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. நீங்கள் உண்மையில் 4,000- க்கும் மேற்பட்ட இடங்களை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கவில்லை. இந்த ஏழு ஆண்டுகளாக பல்லாயிரம் கணக்கான இடங்களைப் பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களிடம் இருந்து பறித்திருக்கிறீர்கள்; அவர்களுக்கு அநீதி இழைத்தீர்கள் என்பது தான் உண்மை. 

 

அனிதா உட்பட 11 மாணவர்கள் தமிழகத்தில் மட்டும் இந்த நீட் என்ற கொடிய கொலை கருவியால் உயிரை இழந்திருக்கிறார்கள். அப்பொழுதும் இந்த அரசு இரக்கமற்றுதான் நடந்து கொண்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக அதே இரக்கமின்மையை இந்த அரசாங்கம் தமிழக மாணவர்கள் மீதும், இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீதும் காட்டி வருகிறது என்பதை நாங்கள் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம். அதுமட்டுமல்ல, இந்த கொடுமைக்காக தமிழகம் ஒருபோதும் நரேந்திர மோடி அரசையும், பாஜகவையும் மன்னிக்காது என்பதையும் தமிழகத்தின் சார்பாக இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இதுமட்டுமல்ல, ஐ.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் எத்தனை இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் ஓ.பி.சி. கமிட்டியில் உள்ளேன். 

 

எத்தனை முறை கட்சிப் பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் எத்தனை முறை, எத்தனை அமைச்சகங்களை அழைத்து ஏன் இந்த இட ஒதுக்கீட்டை நிரப்பப்படாமல் இருக்கிறது என்று கேட்கிறோம். ஆனால் அது இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்திற்கு பிற்படுத்தப்பட்டவர்கள் மீது அலட்சியம் என்பது தான் உண்மை. ஒருபக்கம் தொடர்ந்து இட ஒதுக்கீடு என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாகவும், கார்ப்பரேட் மயமாகவும் மாற்றி வருகிறது. அந்த இடங்களை இட ஒதுக்கீடு இல்லாது என்று அநீதியை அமல்படுத்தி வருகிறது. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு? வரலாற்று பிரிப்பையும், வெற்று பைகளையும் பரப்புவதைக் கைவிட்டு நாட்டுக்கு உண்மையாக இருக்க ஒரே ஒரு முயற்சியாவது செய்யுங்கள். இல்லாவிட்டால் சமூக நீதிக்கான சமரசமற்றப் போராட்டத்தில் நாங்கள் உங்களைப் பணிய வைப்போம் . இப்போதும் அதுதான் நடந்தது; இனிமேலும் அது தான் நடக்கும். நன்றி" என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.  விவாதத்தில் முழுக்க முழுக்க ஜோதிமணி எம்.பி. தமிழில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே, ஓ.பி.சி. பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதால் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். பின்பு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிடும். அதைத் தொடர்ந்து சட்டம் அமலுக்கு வரும். 
 

 

சார்ந்த செய்திகள்