நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மருகால்குறிச்சியில் ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக ஒரு வருடங்களுக்குள்ளாக பழிக்குப் பழியாக இரண்டு தரப்பிலுமாக 5 பேர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரியில், தொடர் சம்பவமாகியிருக்கிறது பழிக்குப் பழி படுகொலைகள்.
இன்று காலை மருகால்குறிச்சியின் சண்முகத்தாய் அருகிலுள்ள தனது உறவினரின் வீட்டிலிருக்க, அடுத்த வீட்டிலிருக்கும் சாந்தி அவருடைய வீட்டிலிருந்திருக்கிறார். காலை 12 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சாந்தியின் வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு அரிவாளால் வெட்டி சாந்தியைப் படுகொலை செய்திருக்கிறது. இதில் சாந்தியின் தலை தொங்கியிருக்கிறது. அடுத்து அந்தக் கும்பல் வேறு ஒருவரைத் தேட, சம்பவமறிந்து பதறிப்போன சண்முகத்தாய் தன் வீட்டிலிருந்து தப்பிய போது அந்தக் கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி வெட்டியதில் அவரின் தலை துண்டானது. பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சடலமானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி உடல்களைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை எஸ்.பி.யான மணிவண்ணன் விசாரணையை மேற்கொண்டதோடு குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தேடுதலைத் தீவிரப் படுத்தியிருக்கிறார்.
போலீசாரின் விசாரணையில், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாக நடந்தவைகள். கடந்த 2019-ல் மருகால்குறிச்சியின் நம்பிராஜன் என்ற வாலிபர் அடுத்த தெருவிலிருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்த வான்மதி என்பவரைக் காதலித்து அவருடன் நெல்லை டவுண் பகுதியில் அடைக்கலமாகியிருக்கிறார். இதில் பெண் வீட்டார் ஆத்திரத்தில் எதிர்த்தனர். மைனர் பெண்ணான வான்மதிக்கு இரண்டு மாதம் முடிந்து 18 வயதானதும், அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார் நம்பிராஜன். இதனால் ஆத்திரமான வான்மதியின் சகோதரன் செல்லச்சாமியும் அவரது தரப்புகளும் 2019 நவம்பரில் நம்பிராஜனை கடத்திச்சென்று நெல்லை டவுண் பகுதியிலேயே படுகொலை செய்திருக்கிறது.
இதனால் நம்பிராஜனின் தந்தை அருணாசலத்தின் தரப்புகள் செல்லச்சாமியைப் பழிவாங்கக் காத்திருந்தது.
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த செல்லச்சாமியைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்த அருணாச்சலம் தரப்புகள், கடந்த மார்ச் மாதம் அவர்கள் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து வெட்டியதில் ஆறுமுகம், சுரேஷ் இருவர் பலியாக மற்றவர்கள் தப்பியிருக்கிறார்கள். இதில் பலியான சுரேஷ் என்ற வாலிபர் அந்த ஹோட்டலின் வேலையாள். ஆள் மாறாட்டம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதில் நம்பிராஜனின் தந்தை அருணாச்சலம், தாய் சண்முகத்தாய் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களனைவரும் அண்மையில் தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள். இவர்களைப் பழிக்குப் பழியாகப் போட்டுத்தள்ள முயற்சிப்பதையறிந்த உளவுப் பிரிவும், போலீசும் அவர்களை எச்சரித்ததோடு. இங்கே வரவேண்டாம் வேறு எங்கேயாவது போய்விடுங்கள். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதே சமயம் எஸ்.பி.யான மணிவண்ணனும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் இதையும் மீறி இன்று காலை இரண்டு பெண்களையும் வெட்டி கொலை செய்திருக்கிறது அந்தக் கும்பல். விசாரணைப் போலீசார், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாகத்தான் தெரிகிறது. 12 பேர்களடங்கிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார்.
எச்சரிக்கைத் தகவலால் ஆண்கள் அலர்ட் ஆகித் தப்பிவிட ஹோட்டல் கொலையில் குற்றவாளியான சண்முகத்தாய் மற்றொரு குற்றவாளியான இசக்கியின் தாய் சாந்தி இருவரையும் குறிவைத்து அடித்திருக்கிறது. அதே சமயம் கும்பல் புகுந்த போது அருணாச்சலமும், அவர் மனைவி சண்முகத்தாயும் பின்புறமாகத் தப்பியதில் சண்முகத்தாய் சிக்கிக் கொள்ள நொடியில் அருணாச்சலம் தப்பியிருக்கிறார்.
உயிருக்கு உயிர், ரத்தத்திற்கு ரத்தம். ஃபார்மூலாக்கள் ஓய்வதில்லை.