சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பெரிய வெள்ளார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித்தொழிலாளி. இவர், மேட்டூர் புதுச்சாம்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலு (50) என்பவரிடம் அவசரத் தேவைக்கு கடன் கேட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் (டிச. 19) காலை, முருகனை மேச்சேரிக்கு அழைத்துச்சென்ற பாலு, சண்முகம் (37) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள், போலி ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், ஒவ்வொரு நல்ல ரூபாய் நோட்டுக்கும் ஐந்து மடங்கு போலி நோட்டுகள் வழங்குவதாகவும் முருகனிடம் ஆசை வார்த்தை கூறினர்.
இதையடுத்து, தன்னிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை முருகன், அவர்களிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட சண்முகமும், பாலுவும் 500 ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை கொடுத்து, வீட்டில் சென்று சரிபார்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
வீட்டில் வந்து அந்த நோட்டுக் கட்டை சரிபார்த்த முருகன், நோட்டுக்கட்டின் மேல்புறமும், கீழ்ப்புறத்திலும் மட்டும் 500 ரூபாய் தாளை வைத்துவிட்டு உள்ளே 98 தாள்களும் வெற்றுத்தாள்களாக வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார்.
இதுகுறித்து முருகன் மேச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மேச்சேரி கந்தசாமிபுரத்தில் பதுங்கி இருந்த சண்முகம், பாலு ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அளவில் கத்தரித்து வைக்கப்பட்டிருந்த வெற்றுக் காகித கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், முருகனிடம் வழங்கிய நோட்டுக் கட்டில் இருந்த 500 ரூபாய் தாள்கள் இரண்டுமே கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலியான ரூபாய் நோட்டுகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.