மேட்டூரில் நண்பர்களுடன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகளே கல்லால் தாக்கி கூலித்தொழிலாளியைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. கட்டடத்தின் பின்பகுதியில் டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் யாரும் வசிக்கவில்லை. இதனால் அப்பகுதி முள்செடிகள் முளைத்து புதர் மண்டிக்கிடக்கிறது. பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதியில், குடிகாரர்கள், சீட்டாடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமையன்று (மே 20) புதர் மறைவிடப் பகுதிக்குச் சிறுநீர் கழிக்கச் சென்ற ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கவர் ரத்த வெள்ளத்தில் அங்கே இறந்து கிடப்பது குறித்து மேட்டூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கொலையுண்ட நபர் மேட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா (40) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. செவ்வாயன்று (மே 19) மாலையில் ராஜாவும் அவருடைய கூட்டாளிகள் சிலரும் சம்பவ இடத்தில் புதர் மறைவில் மது குடித்துவிட்டு, சீட்டாட்டம் விளையாடி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சேர்ந்து கல்லால் தாக்கி ராஜாவை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட ராஜா, கூட்டாளிகள் சிலருடன் புதர் மண்டியிருக்கும் பகுதிக்குச் சென்றதை அப்பகுதியினர் சிலர் பார்த்துள்ளனர். அதன் அடிப்படையிலும், அவருடைய நண்பர்கள் பட்டியலைச் சேகரித்தும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. அந்த வரிசையில் மேட்டூரில் கூலித்தொழிலாளியும் குடிபோதை ஆசாமிகளால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.