சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியபோது, அறிகுறிகள் உள்ளவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேயில் உள்ள அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி, சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர், சென்னையில் உள்ள ஆய்வுக்கூடத்திலும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இதனால் ஆய்வு முடிவுகள் வருவதற்கு தாமதம் ஆனது. அதற்குள் பல பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் இருந்தது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையிலேயே கரோனா நோய்த்தொற்று கிருமிகளை பரிசோதிக்கும் ஆய்வகம் தொடங்கப்பட்டது.
இந்த மையத்தில் நாள்தோறும் 400க்கும் மேற்பட்டோருக்கு சளி தடவல் பரிசோதனை செய்யப்படுகிறது. மைக்ரோபயலாஜி நிபுணர்கள், முதுநிலை மருத்துவர்கள், ஆய்வுக்கூட நுட்புநர்கள் என 30- க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கூட பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார், குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலருக்கும் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த கரோனா ஆய்வகம் மேலும் தரம் உயர்த்தப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, மேட்டூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் கரோனா ஆய்வகம் புதிதாக தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் கரோனாவுக்கு சளி மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிகபட்சமாக சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டாயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதுவரை 96,000 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் சளி தடவல் மாதிரிகளும், சேலம் அரசு மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, மேட்டூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் கரோனா ஆய்வகம் அமைக்கும்படி, அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில் அரசு தற்போது அங்கே ஆய்வகம் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
மேட்டூர் அரசு மருத்துவமனையில் கரோனா ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் மேட்டூர், சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா பாதிப்பு குறித்து உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்,'' என்றனர்.