மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கோடி ஏந்தி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டியில் உள்ள மைதானத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்த்த பிறகே சென்னை செல்வேன். தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் அதிகம் வரக்கூடாது என்று கைது செய்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டே இங்கு வந்தேன். தி.மு.க. விரைவில் ஆட்சிப் பொறுப்பிற்கு வரப்போகிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும். பல்வேறு தடைகளை தகர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியில் குவிந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் விவசாயிகள் இதுபோன்ற போராட்டத்தை நடத்தியது இல்லை" என்றார்.
இந்த போராட்டத்தில் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், வீரபாண்டி ராஜா, கே.என்.நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.