மே 28ந் தேதி இரவு திடீரென கோடை மழை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடனும், ஐஸ்மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமாயணதோப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் சௌந்தர் என்பவர் மழை வருகிறதே என மரத்தின் ஓரம் நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரம் கீழே விழுந்ததில் சௌந்தருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அதேபோல், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் இருசக்கர வாகனத்தில் பத்திரப்பள்ளி விஷ்ணு மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் ஒரே வண்டியில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. சாலை ஓரம் இருந்த புளிய மரம் முறிந்து விழுந்ததில் சாலையில் சென்றுகொண்டு இருந்த இருவர் மீதும் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுப்பற்றி பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் மரக்கிளை ஒன்று உடைந்து அங்கிருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டின் மீது விழுந்து சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து மே 29ந் தேதி காற்றுடன் கூடிய மழையால் அந்த வீடு முற்றிலும் சேதமாகி வீட்டில் இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் பலமுறை வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது என்று வீட்டு உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.