சேலத்தில், தடை உத்தரவை மீறி தேநீர் விற்பனை செய்த மூன்று பேக்கரி கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசியப் பொருள்களான காய்கறி சந்தைகள், மளிகைக்கடைகள் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை மூன்று மணி நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. உணவகங்களில் பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருள்களை விற்பனை செய்வதால் பேக்கரி கடைகளை இயக்குவதற்கு மட்டும் இரு நாள்களுக்கு முன்பு புதிதாக அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கடைகளும் மதியம் 01.00 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்பதோடு, தேநீர், காபி, சிற்றுண்டிகள் வழங்கக்கூடாது என்றும், ரொட்டி, பிஸ்கட் போன்றவற்றையும் பார்சலாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பேக்கரி கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். சூரமங்கலம், இரும்பாலை மெயின் ரோடு, குரங்குச்சாவடி ஆகிய பகுதிகளில் தடை உத்தரவை மீறி தேநீர், காபி விற்பனை செய்ததாக மூன்று பேக்கரி கடைகளைப் பூட்டி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
கடை திறக்க அனுமதிக்கப்பட்ட அன்றே, தடைகளை மீறியதாக மூன்று பேக்கரிகள் மூடப்பட்டது, அத்துறை வணிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.