சேலம் மாநகராட்சியில் போலி சம்பள பட்டியல் மற்றும் காசோலைகளைத் திருத்தம் செய்து 88 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டதன் பின்னணியில் இந்தியன் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் காவல்துறையினர் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ் என்கிற வெங்கடேஷ்குமார் (38). இந்த மாநகராட்சியைப் பொருத்தவரை துப்புரவு பணிகளை பெரும்பாலும் பட்டியல் சமூகத்தினர்தான் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கன்னட செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவர், துப்புரவு பணிகளைச் செய்வதில் ஆர்வமில்லை என்று கூறியதாலும், அவருடைய தந்தை குணசேகரன் இதே மாநகராட்சியில் அப்போது சுகாதார ஆய்வாளராக இருந்ததாலும், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள 'பில்' பட்டியல் தயாரிக்கும் எழுத்தர் பணிக்கு மாற்றப்பட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பிரிவில் இருக்கும் வெங்கடேஷ்குமார்தான், மாதந்தோறும் சம்பள பட்டியல் தயார் செய்து, தாதகாப்பட்டி பெரியார் வளைவு அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உள்ள கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலக கணக்கில் செலுத்தி வந்தார். கடந்த மாதம் திடீரென்று, நடப்பு ஆண்டுக்கான தணிக்கையின்போது சம்பள பட்டியல் ஆவணங்கள், காசோலைகள் சிலவற்றில் திருத்தம் செய்யப்பட்டும் மற்றும் காசோலைகளில் 'ஓவர் ரைட்டிங்' செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனால் எழுந்த அய்யத்தின்பேரில் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ததில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெங்கடேஷ்குமாரிடம் அலுவலக ஊழியர்கள் விசாரணை நடத்தியதில் 88 லட்சம் ரூபாயை சுருட்டி இருப்பதாகவும், சம்பள பட்டியல் மற்றும் காசோலைகளில் திருத்தம் செய்தும் மோசடியில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், செப். 15ம் தேதி வெங்கடேஷ்குமாரையும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தம்பி மோகன்குமாரையும் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவருடைய தாயார் விஜயா, தம்பி மனைவி பிரபாவதி ஆகியோரை தேடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, வெங்கடேஷ்குமார் துப்புரவு ஊழியராக பணியில் நியமிக்கப்பட்டதே சட்ட விரோதமானது என மாநகராட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர். அவர் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்றும், அவருடைய தந்தை இதே மாநகராட்சியில் ஊழியராக இருந்ததால் அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகளின் சிபாரிசின்பேரில் குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கிடையே, இந்த மோசடியில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் இதற்கு முன்பு முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரும், இப்போது மைய அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் ஊழியருக்கும், நிர்வாக பொறுப்பில் இருக்கும் இன்னோர் ஊழியருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கின்றனர். மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, அவர்கள் இருவருக்கும் அவ்வப்போது பணத்தைக் கொடுத்து சரிக்கட்டியிருக்கிறார் வெங்கடேஷ்குமார்.
நாம் செப். 13ம் தேதி இரவு வெங்கடேஷ்குமாரிடம் நேரடியாக விசாரித்தபோது, தனியார் நிதிநிறுவனத்தில் 25 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியதாகவும், அதனால் வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என கடன் சுமை ஏறியதால் வேறு வழியின்றி மோசடியில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். ஆனால், உண்மையில் போலி சம்பள பட்டியல் மூலம் சுருட்டிய பணத்தில் அவர் கருங்கல்பட்டியில் 40 லட்சம் ரூபாயில் ஒரு வீட்டை வாங்கி, அதை தனது தாயார் பெயரில் கிரயம் செய்திருக்கிறார். அத்தோடு, அவர் இரண்டு பேருக்கு தலா பத்து லட்சம் வீதம் 20 லட்ச ரூபாயை வட்டிக்கு கடன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வெங்கடேஷ்குமாரிடம், 'வேறு யார் யாருக்கெல்லாம் வட்டிக்கு கடன் கொடுத்திருக்கிறாய்? அவர்களின் பெயர்களைச் சொன்னால் பணத்தை வசூலித்துவிடலாம்' எனக்கேட்டு, மாநகராட்சி தரப்பிலும் அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கவே, கடைசியாக காவல்துறைக்கு போயிருக்கிறார் கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு.
வெங்கடேஷ்குமார் 'டேம்பர்' செய்த சில காசோலைகளை நாமும் பார்த்தோம். அதில், எழுதப்பட்ட எண்கள் வாகாக மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. 0, 6 ஆகிய எண்கள் 8, 9 ஆகவும், 1 என்ற எண் 7 ஆகவும் திருத்தி எழுதியிருக்கிறார். அதேநேரம், சில காசோலைகளில் எழுத்தால் எழுதப்பட்ட விவரங்களை பிளேடு மூலம் சுரண்டி எடுத்துவிட்டு, அதன் மீது (ஓவர் ரைட்டிங்) திருத்தி எழுதியிருக்கிறார்.
அவ்வாறான காசோலைகளை பார்த்த மாத்திரத்திலேயே எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஆனாலும் இந்திய வங்கி ஊழியர்கள் இது போன்ற காசோலைகள் மீது எவ்வித அய்யமுமின்றி அனுமதித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை அளிக்கிறது என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். நம் கள விசாரணையில் இன்னொரு தகவலும் கிடைத்தது. கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் தாதகாப்பட்டி இந்தியன் வங்கி கிளையில், டேம்பரிங் செய்யப்பட்ட எந்த ஒரு காசோலையையும் வெங்கடேஷ்குமார் மாற்றவில்லை.
அவர் ரொம்பவே சாதுர்யமாக, திருத்தப்பட்ட காசோலைகளை செவ்வாய்ப்பேட்டை, கோட்டை, ஜே.கே.பட்டி கிளைகளில் மாற்றி, பணத்தைச் சுருட்டியிருக்கிறார். தாதகாப்பட்டி இந்தியன் வங்கி கிளையிலும் விசாரித்தோம். அங்குள்ள உயரதிகாரி ஒருவர், 'வெங்கடேஷ்குமார் சம்பள பட்டியல், காசோலைகளுடன் வருவார். வழக்கமாக வரக்கூடியவர் என்பதால் அவருடைய நடவடிக்கையில் எங்களுக்கு எந்த சந்தேகமும் வந்ததில்லை. இந்த கிளையில் டேம்பரிங் செய்யப்பட்ட காசோலைகள் மூலமாக எந்த முறைகேடும் நடக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை,' என்றார்.
இதனால் வெங்கடேஷ்குமார், தாதகாப்பட்டி கிளை தவிர வேறு எந்தெந்த கிளைகளில் இருந்து போலி காசோலைகள் மூலம் பணத்தை எடுத்திருக்கிறாரோ அந்த வங்கிக் கிளை ஊழியர்களிடமும் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது. பொதுவாக, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் காசோலையில் சிறு வித்தியாசம் இருந்தால்கூட அதை வாங்க மறுக்கும் வங்கி ஊழியர்கள், பார்த்த மாத்திரத்திலேயே தெளிவாக தெரியும் வகையில் பல காசோலைகள் திருத்தி எழுதப்பட்டு, மேலொப்பம்கூட இல்லாமல் பணமாக்கப்பட்டு இருப்பதால்தான் வங்கி ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாமோ என்று சந்தேகிப்பதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். இந்நிலையில், விரைவில் வெங்கடேஷ்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போதும் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.