Skip to main content

பட்டப்பகலில் துப்பாக்கியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்! காவல்துறையினர் அதிர்ச்சி!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Salem collector office issue

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பட்டப்பகலில் இரண்டு பெண்கள் நாட்டுத் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள அசம்பூரைச் சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. இவருடைய மனைவி பார்வதி மற்றும் மகள் சுமதி. இவர்கள் இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை (மார்ச் 20) காலை கையில் நாட்டுத் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ளே நுழைந்தனர். மக்கள் குறைதீர்ப்பு முகாம் நாளன்று இரண்டு பெண்கள் திடீரென்று கையில் துப்பாக்கியுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். 

 

ஏற்காடு அசம்பூரைச் சேர்ந்த பழனிவேலுக்குச் சொந்தமாக 3.50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர் பாடுபட்டு வந்தார். விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புக்காக அவர் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வந்தார். துப்பாக்கி உரிமத்தை தொடர்ந்து புதுப்பித்து வந்த அவர், கடந்த 2021ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதையடுத்து அந்த துப்பாக்கிக்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது. 

 

பழனிவேல் மறைவுக்குப் பிறகு அந்த துப்பாக்கி தங்களுக்குப் பயன்படாது எனக்கருதிய அவருடைய மனைவியும் மகளும் அதை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியை ஒப்படைப்பதற்காக அவர்கள் வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

 

இதையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் சேலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியை ஒப்படைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்