‘தி ரைஸ்’ என ஆங்கிலத்திலும் எழுமின் என தமிழிலும் அறியப்படும் உலகத் தமிழர் தொழில் வணிக அமைப்பு கடந்த 2018ஆண்டு ஜெகத் கஸ்பர் அவர் தொடங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் சீரிய வளர்ச்சி கண்டுள்ள இந்த அமைப்பிற்கு இப்போது 31 நாடிகளில் கிளைகள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே 13 உலக மாநாடுகளை நடத்தி, தமிழர்கள் தமக்கிடையே பல்லாயிரம் கோடி மதிப்பிலான தொழில் வணிக பரிமாற்றங்கள் செய்துகொள்ள இந்த அமைப்பு வழி வகை செய்துள்ளது. கடைசியான 13வது மாநாடு வலிமையான உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடும் சுவிட்சர்லாந்து டாவோஸ் பனிமலை நகர் அரங்கில் நடைபெற்றது. மாபெரும் 14வது மாநாடு சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் இம்மாதம் 9,10,11 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 40-க்கும் மேற்பட்ட நாடுகள். நகரங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேலான தமிழ் தொழிலதிபர்கள், வணிகர்கள், திறனாளர்கள் பங்கேற்கிறார்கள். இம்மாநாட்டில் ரூ.1000 கோடுக்கு மேல் தமிழரிடையே தொழில் வணிகப் பரிமாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களான கே.என். நேரு, த.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
‘வணிகம் வெல், வையத் தலைமை கொள்’ என்பது இம்மாநாட்டின் அறைகூவல், மாநாட்டின் போதே ரூ.1000 கோடி அளவுக்கு தொழில் - வணிக ஒப்பந்தங்கள் நடைபெறும் என மதிப்பீடு செய்யப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து 30 தொழிலதிபர்களும், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து 27 தொழிலதிபர்களும், பிரித்தானியாவிலிருந்து 40. துபாய், அபுதாபி நகரங்கலிருந்து 70 என இவ்வாறு 40-க்கும் மேலான நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்களும், திறானாளர்களும் இம் மாநாட்டிற்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் உலகச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல இவர்கள் பேருதவியாக இருப்பார்கள். செயற்கை அறிவு, அதற்கும் அப்பாலான ‘குவான்டம் இன்டெலிஜென்ஸ்' துறைகளுக்கு இம்மாநாட்டில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்துறைகள் சேர்ந்தவர்களுக்கென தனியாக அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை அறிவுத்துறை இயக்குநர் செசில் சுந்தர், ஸோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி, பெக்கி செயற்கை அறிவு நிறுவனத் தலைவர் கணேஷ் ராதாகிருஷ்ணன், மாயு செயற்கை அறிவு நிறுவனத் தலைவர் பிரபாகரன் முருகையா, விடார்ட் நிறுவனத் தலைவர் சித் அஹமத் உள்ளிட்ட பேராளுமைகள் பலர் பங்கேற்கிறார்கள்.
ஜனவரி 8ஆம் தேதி சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் செயற்கை அறிவுத் துறையில் பயிலும் ஆயிரத்துக்கும் மேலான மாணவர்களுக்கு இப்பேராளுமைகள் கட்டணமில்லா கருத்தமர்வு நடத்துவார்கள். தொழில் தொடங்க விரும்புவோர் அதற்கான மூலதன நிதியை திரட்டுகின்ற வாய்ப்பும் 'தி ரைஸ்' சென்னை மாநாட்டில் தரப்பட்டுள்ளது. மாநாட்டின்போது நடைபெறவுள்ள ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா நிதி திரட்டும் சீரிய வாய்ப்பாக அமையும். சமூக நோக்குடன் சில முக்கியமான திட்டங்களையும் தி ரைஸ் சென்னை மாநாடு முன் வைக்கிறது. ஈழப் போரினால் விதவைகளாக்கப்பட்ட சுமார் 70000 தமிழ்ப்பெண்கள் இலங்கையின் வட கிழக்கு மாவட்டங்களில் வாழ்கிறார்கள் அவர்களது நிலைத்த வாழ்வாதாரத்திற்கான திட்டங்களை தி ரைஸ் அமைப்பும் ஹலீமா அறக்கட்டளையும் இணைந்து செயற்படுத்துகின்றன. இத்திட்டத்திற்காக ஹலீமா அறக்கட்டளை 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. கறவை மாடு வளர்த்தல், ஒருங்கிணைந்த சிறு வேளாண்மை. எதிர்காலத்தில் ஆவின் அமுல் போன்ற கூட்டுறவு பால் தொழில் வளர்த்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய கூறுகள். போரினால் விதவைகளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களே இத்திட்டத்திற்கும் தலைமை ஏற்பார்கள்.
உலகில் எங்கு வாழ்ந்தாலும் வந்து தங்கி மொழி, கலை பயிலவும் சித்த முறை மருத்துவ உதவிகள் பெறவும், ஓய்வு காலத்தை செலவிடவும் விரும்பும் தமிழர்களுக்காக ‘தமிழூர்’ என்ற பெருந்திட்டமும் தி ரைஸ் சென்னை மாநாட்டில் முன்வைக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே 70 ஏக்கர் நிலத்தினை குற்றாலத்திற்கு அருகில் தி ரைஸ் அமைப்பு வாங்கிவிட்டது. வீட்டு மனைகள் மற்றும் கட்டுமானத் துறைகளில் மிகப்பெரிய தனித்துவமான இடத்தை சாதித்துள்ள ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் இம்மாநாட்டின் முதன்மைப் புரவலராகத் திகழ்கிறது. ‘தமிழூர்’ திட்டமும் தமிழர் தொழில் வணிகப் பெருமன்றம் அமைப்பும் இணை புரவலர்களாக இருக்கின்றனர். வரலாற்றுச் சிறப்புமிகு இம்மாநாட்டில் பங்கேற்று தொழில் வணிகம் பெருக்கவும், ஏற்றுமதி இறக்குமதி வளர்க்கவும். அனுபவ அறிவு பெறவும். தமிழர் நட்பினை உலகளவில் பெறவும் விரும்புவோர் summit.tamilrise.org என்ற இணையதளம் மூலமாகவோ 9150060032 / 35 ஆகிய எண்களுக்கு அழைத்தோ பதிவு செய்யலாம். ஜனவரி 7-ம் தேதியுன் முன்பதிவு முடிவடைகிறது.
Published on 03/01/2025 | Edited on 03/01/2025