மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் போராளி சுரேஷ்ராஜன் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம், மாவோயிஸ்ட். கேரள வனப்பகுதியில் தலைமறைவாக இருந்து போராடி வந்தார். கடந்த 2019- ஆம் ஆண்டு, அம்மாநில தண்டர்போல்ட் அதிரடிப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த மோதலில் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சொந்த ஊரில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அரசுக்கு எதிராகவும், ‘ரத்தத்திற்கு ரத்தத்தால் பழி வாங்குவோம்’ என்றும் மாவோயிஸ்ட் போராளிகள் சபதம் எடுத்தனர்.
இது தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல்துறையினர், 16 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு, மதுரையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுரேஷ் ராஜன் (45) என்பவரை கைது செய்தனர். அவரை ஓமலூர் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்திய காவல்துறையினர், நடுவர் உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சேலம் சிறையில் பிப். 21- ஆம் தேதி மதியம் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் சுரேஷ்ராஜன். சிறை வார்டன்கள் அவருக்கு மதிய உணவு கொண்டு வந்து கொடுத்தபோது, அதை சாப்பிட மறுத்ததோடு, உணவையும் திருப்பி அனுப்பினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இந்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை ‘தேச விரோதிகள்’ என அறிவிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்; விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாவோயிஸ்ட் சுரேஷ்ராஜன் தொடர்ந்து இரண்டாம் நாளாக திங்களன்றும் (பிப். 22) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை உணவு உண்ண மாட்டேன்’ என்றார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.