Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
go

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23). கடந்த 24.6.2015-ம் தேதியன்று மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.


இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை நாமக்கல் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 30.8.2018-ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.


விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரைத் தவிர யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர். யுவராஜ் தரப்பில் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜி.கே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆஜராகி வருகிறார். அரசுத்தரப்பில் சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதி இதுவரை ஆஜராகி வந்தார்.


இதற்கிடையே கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அரசுத்தரப்பில் பவானியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பா.மோகனை ஆஜராக உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுத்தரப்பு வழக்கறிஞராக பா.மோகனை நியமிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், பா.மோகன் வழக்கறிஞரை கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜராக முறையான ஆணை பிறப்பித்தார். 


இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் சிலரிடம் இன்று (5.1.2019) விசாரணை நடத்தப்படும் என்று ஏற்கனவே வாய்தா ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நீதிபதி இளவழகன் இன்று விடுப்பில் சென்றதால், வழக்கு விசாரணையை வரும் 10.1.2019-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், வழக்கறிஞர் பவானி பா.மோகன், அரசுத்தரப்பு வழக்கறிஞராக, தான் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு ஆணையை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தன்னை கோகுல்ராஜ் வழக்கில் இணைத்துக்கொண்டார். 


நீதிபதி விடுப்பு குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்து இருந்ததால் சாட்சிகளுக்கு அழைப்பாணை வழங்கப்படவில்லை. 


குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்றத்திற்கு எஸ்கார்ட் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்தனர். வாய்தா ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

சார்ந்த செய்திகள்