திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா நவம்பர் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு உச்சத்துக்கு வந்துள்ளது. 11 நாட்களுக்கு மலை உச்சியில் தீபம் காட்சியளிக்கும்.
டிசம்பர் 6 ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகாதீபமும் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஏற்றப்படும் மகாதீபத்தையும், மகாதீபத்தன்று மட்டும் வெளிவந்து பக்தர்களுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் காண பக்தர்கள் விரும்புவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவிற்கு வருகிறார்கள். அவ்வளவு பேரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. அதிகபட்சம் மூன்றாம் பிரகாரத்தில் 10 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும் என்பது பொதுப்பணித்துறையின் கணக்கு.
இதனால் இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோவிலுக்குள் வருவதற்கு பாஸ் அச்சடித்து வழங்குகிறது. பாஸ் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி நடக்கிறது எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டதால் பாஸ் வழங்குவதில் சில விதிமுறைகளை வகுத்து தந்துள்ளது நீதிமன்றம். அதன்படி மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை, அரசுத்துறையை சேர்ந்தவர்கள், கோவில் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் போன்றவர்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும். பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நேர் எதிராக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பாஸ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த பாஸ்கள் யாருக்கு தரப்படுகின்றன. அதற்கான முழு பட்டியல் யாரிடம் உள்ளது என அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கேட்டால் தங்களது தலைமையைக் கைகாட்டுகின்றனர். துறைத் தலைமை, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது என அவர்களை கைகாட்டுகிறது. உள்ளூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கே பாஸ் கிடைப்பதில்லை. ஆனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் முக்கியப் பிரமுகர்கள் பாஸ் வைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே இருக்கிறார்கள்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாஸ் 2 ஆயிரம் ரூபாய் தந்து வாங்கினேன் என வரிசையில் செல்லும் ஒருவர் சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
விவரம் அறிந்தவர்கள் நம்மிடம், ஒரு பாஸ் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. இந்த பாஸ்கள் பெரும்பாலும் இந்து சமய அறநிலையத்துறை, கோவிலில் பணியாற்றுபவர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்ட புரோக்கர்கள் வழியாகவே விற்கப்படுகிறது. இப்படி பாஸ்கள் விற்பனை மூலமாக லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். இதில் அனைவருக்கும் பங்கு போகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் பாஸ் விற்பனை நடக்கிறது. இப்போது அதிக விலை போவதற்கான காரணம், கோவிலுக்குள் சாதாரண பொதுமக்களை அனுமதிக்காமல் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பணம் உள்ளவர்களை மட்டும் அனுமதிப்பதால் வரும் பிரச்சனை. தற்போதைய ஆட்சியில் இந்த நிலை மாறும் என நினைத்தோம், மாறவில்லை.
தீபத்திருவிழாவின் போது மட்டும் இந்த பாஸ் விற்பனை பற்றி கோபமாக பேசிவிட்டு அப்படியே விட்டுவிடுவதால் அடுத்து வரும் வருடமும் இது நடக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுகிறது.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.