இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.
வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.