திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலை, விஷமங்கலம் அருகே உள்ள நாகராஜன்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. ஆனால் அது அரசு மதுபான கடைதான் என்பதற்கு அங்கு போர்டு எதுவும் இல்லை. இருந்தாலும் கூட அப்பகுதியில் உள்ள கூலி வேலை செய்யும் மக்கள், படிக்காத பாமர மக்கள் குடிப்பதற்காக மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 முதல் 25 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்து வருகின்றனர்.
அது ஒருபக்கம் இருக்கும் நிலையில் அந்த மதுபான கடையில் காலாவதியான மது பாட்டில்களை அதிகபட்ச விலையான 200 ரூபாய்க்கு மேல் 225 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மது பாட்டில்களை வாங்கி காலாவதி ஆகி உள்ளது என்று கேட்டபோது, அதுக்கு என்ன? அதையே குடி போ... என்று பதில் அளித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களுக்குத் தகவல் அளித்தனர். அதன்படி, செய்தியாளர்கள் செய்தி சேகரித்துகொண்டிருந்த போது, உள்ளே இருந்து வெளியே வந்த விற்பனையாளர் கோவிந்தராஜ் என்பவர் செய்தி சேகரித்த செய்தியாளரிடம் நீங்க மட்டும்தான் வீடியோ எடுபீங்களா? நானும் எடுப்பேன் என்று செய்தியாளரை போட்டோ எடுத்து விட்டு அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்றே சொல்லாமல் சென்று விட்டார்.
மேலும் அந்தக் கடையில் கூடுதல் விற்பனை, காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடக்கிறது என்று கூறப்படுகிறது. இது குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அதில் பணியாற்றும் நபர்கள் மிரட்டல் விடுவதால் அங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.