Skip to main content

கூடுதல் விலைக்கு மது விற்பனை; 'சஸ்பெண்ட்' நாடகம் போடும் டாஸ்மாக் அதிகாரிகள்!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 sale of alcohol at a surcharge; Tasmac officials who play 'suspend'!

 

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

சில மாதங்களுக்கு முன்பு, சிலர் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை மாமூல் கேட்பதால், அதைச் சரிக்கட்டும் வகையில் மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் சொல்லப்பட்ட காணொளி பதிவுகளும் உலா வந்தன.

 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, எம்ஆர்பி விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த உத்தரவை எந்த ஊழியரும் மதிப்பதில்லை. ஊழியர்கள் எப்போதும் போலவே, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், சேலம் மாவட்ட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி தலைமையில் அலுவலர்கள், வாழப்பாடி பகுதியில் மதுபானக் கடைகளில், செப். 13ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு கடையில், எம்ஆர்பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் விலை வைத்து 270 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையின் விற்பனையாளர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட மேலாளர் உத்தரவிட்டார்.

 

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மீண்டும் எச்சரித்து, அனைத்து மதுபானக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இப்போதும் தொடர்ந்து குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஃபுல் மதுபான பாட்டிலுக்கு 40 ரூபாய் வரையிலும் கூடுதல் விலை வைத்துதான் விற்பனை செய்கின்றனர். ஆனால், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பெயரளவுக்கு யாராவது ஓரிருவரை பணியிடை நீக்கம் செய்து நாடகம் ஆடுகின்றனர் என்று மது வாங்குவோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

அதேநேரம், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியரிடம் இருந்து மீண்டும் பணம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர் மீதான தண்டனையை ரத்து செய்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்