சேலம் அருகே, கோயில் பூசாரியை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த வலசையூர் சுந்தர்ராஜன் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (56). நெசவுத்தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு ஒரே மகள். அவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
பாஸ்கரன், தனது வீட்டின் அருகில் சிறிய அளவில் காளியம்மன் கோயில் கட்டியுள்ளார். அந்தக் கோயிலின் பூசாரியாகவும் இருந்து வந்தார்.
கடந்த 17.2.2019ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கரன் அதன்பின் வீடு திரும்பவில்லை. பவுர்ணமி நாள்களில் எங்காவது வெளியூர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு இரண்டு நாள்கள் கழித்துதான் பாஸ்கரன் வீடு திரும்புவாராம். இதனால் அவர் எங்காவது கோயில்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதிய அவருடைய மனைவி, அவரை எங்கேயும் தேடவில்லை.
இந்நிலையில், அரூர் பிரதான சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள காலி நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பாஸ்கரன் சடலமாகக் கிடந்தார். செவ்வாய்க்கிழமை காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து, வீராணம் காவல்நிலையத்துக்குக் தகவல் அளித்தனர்.
உதவி ஆணையர் தினகரன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்றனர். சடலத்தைப் பார்த்து அவருடைய மனைவி பத்மா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கதறி அழுதனர். காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் லேசாக அழுகிப்போய் இருந்தது. பாஸ்கரன், வீட்டில் இருந்து காணாமல் போன அன்றே கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. கழுத்தில் உள்ள காயம், கண்ணாடி சில்லுகளால் அறுக்கப்பட்டதுபோல் தெரிந்தது.
காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்துக்கொண்டே சடலம் கிடந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் சென்று நின்று கொண்டது. கொலையாளிகள் அந்த வாழைத்தோட்டத்தில் நின்று சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
கொல்லப்பட்ட பாஸ்கரன், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் காளியம்மன் கோயில் விழாக்களை நடத்தி வந்துள்ளார். பொதுமக்களிடம் நன்கொடைகூட வசூலிப்பது கிடையாது என்கிறார்கள். மேலும், எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
பொதுமக்கள் இவ்வாறு கூறினாலும், சடலம் கிடந்த இடத்திற்கு பாஸ்கரன் வருவதற்கு என்ன காரணம்? ஒருவேளை மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு சடலத்தை அந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றார்களா? அல்லது பெண்கள் விவகாரம், கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏதும் அவர் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.