தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இம்மாதம் 27ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்குச் செல்கிறார். இந்நிலையில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னையில் இன்று (21.08.2024) நடந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தொழில் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் (சி.இ.ஓ.) சந்தானம் பங்கேற்றுப் பேசினார். அவரது பேச்சை முதல்வர் மிகவும் ரசித்தார்.
மாநாட்டில் பேசிய சி.இ.ஓ. சந்தானம், “தமிழ்நாட்டில் இருப்பவர்களைப் போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. நிலையான ஆற்றலைப் பயன்படுத்தி, தயாரிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றால் தமிழ்நாட்டிற்குத்தான் நீங்கள் வரவேண்டும். மேம்பட்ட கல்வித்தரம் மற்றும் திறன் மிக்கவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
முதலீட்டாளர்களை தங்களது கூட்டாளிகளாகப் பார்ப்பது;. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண அரசு எடுக்கும் முனைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், தமிழ்நாட்டினை, முதலீடுகள் செய்ய முன்னணி மாநிலமாக நிலை நிறுத்தியுள்ளன. முதலீடுகள் செய்வதற்கான வழிமுறைகள் தமிழ்நாட்டில் தான் அதிக வெளிப்படைத் தண்மையுடன் உள்ளன” என்று தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்குச் சாதகமான சூழல்களை விவரித்துப் பேசினார். சந்தானத்தின் இந்த பேச்சு, தொழில் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.