காதலனை மறக்க முடியாமல் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டதும், அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் செவரப்பூண்டி பகுதியை சேர்ந்த வெண்ணிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த வாரம் 9 ஆம் தேதி திருமணம் நடந்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறுவீட்டு விருந்திற்காக புதுமண தம்பதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வெண்ணிலா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் பரிசோதனையில் வெண்ணிலா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக வெண்ணிலாவின் தந்தை கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வெண்ணிலாவின் கணவர் சொந்த ஊரான குந்தலப்பட்டில் உள்ள வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஊருக்கு அருகே உள்ள பம்புசெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முருகனின் தற்கொலை குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி புதுமண தம்பதிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணையில் ஏற்கனவே வெண்ணிலாவிற்கு இரண்டு ஆண்டுக்கு முன் சோமஸ்பாடியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்னர் வெண்ணிலா செவரப்பூண்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஏழுமலை என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி முருகனுக்கு திருமணம் செய்து வைத்ததால் வெண்ணிலா தற்கொலை செய்துகொண்டதும், மனைவி உயிரிழந்ததால் கணவன் முருகன் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.