சமூக வலைதளத் தோழர்களை மிரட்டும் வகையில் வழக்குகள் பதிவு செய்திட காவல்துறையை பயன்படுத்தும் ஆளும் அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் என்று தெரிவித்துள்ளார் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் இரா.கிரிராஜன். இது குறித்த அவரது அறிக்கை:
’’அங்கெங்கெனாதபடி எங்கும், தினந்தோறும் ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமந்து திரியும் ஆளும் அ.தி.மு.க. அரசு, தனது அதிகார மமதையில், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்திடும் வகையில், ஜனநாயக ரீதியில் கருத்துகளை எடுத்து வைத்திடும் எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடுத்து மிரட்டிப் பார்ப்பது வாடிக்கையாக கொண்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்கு கருத்து, பதிலுக்கு பதில் என மறுப்பு கருத்துகளை கூறிட வகையற்ற - திராணியற்ற காரணத்தினால், அவர்கள்மீது பொய் வழக்குகளை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து, வழக்கு பதிவு செய்து, மிரட்டிப் பார்ப்பதை தி.மு.க. சட்டத்துறை வன்மையாக கண்டிக்கிறது.
ஜனநாயக ரீதியில் கருத்துச் சுதந்திரத்தை காத்திடும் கழகத் தோழர்களுக்கு என்னென்றும் தி.மு.க. சட்டத்துறை துணை நிற்பதோடு, அவர்கள்மீது புனையப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக எதிர் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’’