பாவம் ஒரு பக்கம்.. பழி ஒரு பக்கம்.. எனச் சொல்வார்கள் அல்லவா? அதுபோல, தேனி எம்.பி., ரவீந்திரநாத்குமார் விஷயத்தில் நடந்திருக்கிறது.
சென்னையை அடுத்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தை கொரோனா ஆய்வகமாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் ரவீந்திரநாத்குமார் நன்றி தெரிவித்தபடி இருக்கிறார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோ, தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் அமைக்க அனுமதி பெற்று தந்த தளபதி ஓ.பி.ஆர். எம்.பி. அவர்களுக்கு நன்றி என, வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இது பொறுக்காமலோ என்னவோ, ரவீந்திரநாத் எம்.பி. தன்னுடைய மனைவியையும் அழைத்துச்சென்று நிர்வாண சாமியார் ஒருவரைத் தரிசித்தார் என புரளி பரப்பியதோடு, போட்டோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர், நெட்டிசன்கள். அந்த போட்டோவில், தாடி வைத்துள்ள ஒருவரின் பக்கத்தில் அமர்ந்துள்ள பெண், இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டிருக்க, சாமியாரின் நிர்வாணத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான், அவர் அப்படி நடந்துகொண்டார் என்று ‘கமெண்ட்’ வேறு போட்டுள்ளனர்.
அந்த போட்டோவில் உள்ளது கர்நாடக மாநில பா.ஜ.க.அமைச்சர் சி.டி.ரவி எனவும், ரவீந்திரநாத் கிடையாது என்றும் எம்.பி. தரப்பில் விளக்கம் அளித்து ஓய்ந்துவிட்டனராம்.