Skip to main content

“ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும்...” - ஆர்.எஸ். பாரதி

Published on 23/08/2023 | Edited on 23/08/2023


 

R.s.Bharathi condemned tamilnadu governor for not accepting TNPSC Chairman

டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி நியமனம் தொடர்பாகத் தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆளுநர் ஆர்.என். ரவி சில கேள்விகளை முன்வைத்துக் கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழக அரசு சார்பாக டி.என்.பி.எஸ்.சியின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நியமித்து அதன் கோப்புகளைத் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிப்பது தான் முறையாகும். ஆனால், அவர் திட்டமிட்டு மறுப்பதற்கான உள்நோக்கம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். அரசு உயர் பதவிகளில் சமூக நீதி பின்பற்ற வேண்டும். கலைஞர் இருந்த ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்ட அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பதவிகள் வழங்க வேண்டும் என்று எண்ணி அதைச் செய்தார். அந்த வழியில் தான் டி.என்.பி.எஸ்.சி தலைவராக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லையோ அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

 

முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர் பணியாற்றி வந்த காலத்தில் எந்தவிதமான விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் தன்னுடைய பணியில் சிறப்பாக செய்தார். அதை வைத்து தான் அவரை டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவராகத் தமிழக அரசு பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநர் ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது பெயரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் கடந்த காலங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிவரும் காலங்களில் அந்த முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையில் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரைத் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நியமித்து அனுப்பியது. ஆனால், அதை மறுத்து ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது.

 

சென்னை தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம். ஆனால், ஆளுநர் மெட்ராஸ் டே என்று பதிவு போடுகிறார். இதன் மூலம் தமிழக மக்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார் என்று தெரிகிறது.  அவருடைய செயலைத் தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதற்குரிய விலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தர வேண்டியிருக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுகவினரையே டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்தார்கள். ஆனால், நாங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அனுபவம் மிக்கவரான சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தோம். எங்கள் கட்சியிலும் பல அனுபவசாலிகள், வழக்கறிஞர்கள் இருந்தபோதும் கூட அவர்களை இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை.

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும். தற்போது தி.மு.க மென்மையாக இருக்கிறது. எங்கள் தலைவர் அனுமதித்தால் பழைய தி.மு.க.வாக மாறுவோம். அப்படி மாறக்கூடியவர்கள் தி.மு.க.வில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முதல்வர் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலைமை வரும். அ.தி.மு.க.வை நாங்கள் அழிக்கமாட்டோம். அவர்கள் எங்கள் பங்காளி. நாங்கள் எல்லாம் ஒரே பிராண்ட் தான். அவர்கள் வரும் காலங்களில் எங்களுடன் வந்து இணைவார்கள்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்