உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பாஜகவை எச்சரித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசால் தொடர்ந்து ஏவப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த சோதனை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை மூலமாக தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது; அமலாக்கத்துறை தொடர்ந்த எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை; எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது; பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அகில இந்தியப் பிரச்சனையாகும். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது; இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறுகிறது; மோடி அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் கர்நாடகாவில் பா.ஜ.க.வுக்கு என்ன ஏற்பட்டதோ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அதே நிலை ஏற்படும்” என்றார்.