வருமான வரித் துறை சோதனையில் தங்களிடம் மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகும் தகவலை ஜி.ஸ்கொயர் நிறுவனம் மறுத்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி.ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அந்த நிறுவனத்தில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கு ஜி.ஸ்கொயர் நிறுவனம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த மறுப்பில், ‘எங்களிடம் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதனை வருமான வரித் துறையிடமே உறுதி செய்து கொள்ளலாம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தவறான வழிகாட்டுபவை. இந்தச் சோதனையின் மூலம் எங்களுக்கு அரசியல் கட்சியினருடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் நிகர வருவாய் 38 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித் துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.