முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தின் போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்த முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தும் நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் அம்ஜத் அலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக ரவிச்சந்திரன், வைத்தியநாதன் மற்றும் கலா ஆகியோர் ஆஜராகி வழக்கை நடத்தினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகிய இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், பிரிவு 354.ஏ-ன் கீழ் ராஜேஷ் தாஸ்க்கு ரூ. 10,000 அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேபோல், பிரிவு நான்கு ‘தமிழ்நாடு பெண்கள் தொல்லை தடுப்புச் சட்ட’த்தின் கீழ் மூன்று வருட சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 341ன் கீழ் ரூ. 500 ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியான கண்ணனுக்கு 341ன் கீழ் ரூ. 500 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், ராஜேஸ் தாஸ்க்கு ஜாமீன் கிடைக்க வழி இருக்கிறதா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வழக்கறிஞர் “உடனடியாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ராஜேஷ் தாஸ் இரண்டு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ஏக காலத்திலும், அபராத தொகையாக இரண்டு 10,000 ரூபாய் மற்றும் ரூ. 500 என மொத்தம் 20,500 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.