மேச்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (47). இரும்பாலையில் சீனியர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். பகுதி நேரமாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அவருடன் மேச்சேரியைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரும் சேர்ந்து வீடுகளைக் கட்டி விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர்.
இவர்கள் சமீபத்தில் மேச்சேரியைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கு ஒரு வீட்டை விற்றுள்ளனர். நேற்று, வீடு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 லட்சத்தை ஒரு வயர் பையில் வைத்து, அதை தனது மோட்டார் சைக்கிளில் மாட்டிக்கொண்டு வெங்கடாச்சலம் மேச்சேரி சென்றார். அங்கே சுப்ரமணி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப்பணிகளை பார்வையிடுவதற்காக பணத்துடன் வாகனத்தை கீழே நிறுத்திவிட்டு மாடிப்படி வழியாக மேலே ஏறிச்சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். கீழே இறங்கி வந்து பார்த்தபோது பணப்பை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெங்கடாச்சலம் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.