கோவையில் தொழிலதிபர் காரில், ரூ.1 கோடி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பூக்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அவரான் என்பவரின் மகன் அப்துல் சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், தனது தொழில் விஷயமாக அடிக்கடி கோவைக்கு வந்துசெல்வது வழக்கம். அப்படி வந்து செல்லும்போது வியாபாரத்திற்கு உரிய பணத்தை எடுத்துச் செல்வாராம்.
இவரிடம், அதே பூக்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அசைன் என்பவரின் மகன் சம்சுதீன் (42) டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். அப்துல் சலாம், தனது காரில் டிரைவர் சம்சுதீனுடன் நேற்று கோவைக்கு வியாபார ரீதியாக வந்துள்ளனர். வியாபாரம் முடிந்த பின்னர், இன்று அதிகாலை கோவையில் இருந்து இருவரும் புறப்பட்டுள்ளனர். அப்போது 27 லட்சம் ரூபாயை அப்துல்சலாம் வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாலக்காடு சாலை நவக்கரை நந்தி கோவில் அருகே, இன்று அதிகாலை 4:30 மணி அளவில் கார் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, திடீரென பின்னால் வந்த கார் ஒன்று, அப்துல் சலாமின் காரை வழிமறைத்தது. அந்த காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர், அப்துல் சலாமை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பயந்துபோன அப்துல் சலாமையும் அவரது டிரைவர் சம்சுதீனையும் காரில் இருந்து இறக்கி, தள்ளிவிட்ட அந்தக் கும்பல், அப்துல் சலாம் வந்த கார் மற்றும் அவர் கொண்டுவந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து அப்துல் சலாம், கே.ஜி.சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று நடத்த விபரத்தைத் தெரிவித்து, தன்னிடம் இருந்து 27 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர் எனத் தெரிவித்துள்ளார். உடனே கே.ஜி.சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், இது குறித்த தகவலை போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
பின்னர் செக்போஸ்ட்டிற்கு தகவல் தெரிவித்து தப்பிச்சென்ற காரை தேடத் துவங்கினர். தொடர்ந்து கோவை போலீஸ் எஸ்.பி.அருளரசு, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திவந்தார். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். தொழிலதிபர் அப்துல் சலாம் பணம்கொண்டு செல்லும் விபரம் தெரிந்த நபர்கள், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரேனும் இந்தக் கொள்ளைச் சமபவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில், கோவை - சிறுவாணி ரோடு மாதம்பட்டி அருகே அப்துல் சலாமின் கார் கேட்பாரற்று நின்றிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று காரை மீட்டனர். மேலும், கோவை பேரூர் பச்சாபாளையம் சாலை ஓரம் கிடந்த 2 செல்ஃபோன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதற்கிடையே கைப்பற்றிய கார் கே.ஜி.சாவடி காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு, அப்துல் சலாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், பணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். மேலும், காரின் பின் இருக்கைக்கு கீழே, அமைக்கப்பட்டிருந்த ரகசிய இடத்தில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்துக்கு அப்துல் சலாமிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அது 'ஹவாலா' பணமாக இருக்கலாம் என்று கருதி, அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவம் நாடகமா? என்றும் தீவிர விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.