பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.
கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.
இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.