கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 24). ரவுடியான இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா புழக்கம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை அவர் கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கண்ணனை அரிவாளால் வெட்டினர். மேலும் உருட்டு கட்டை, கல்லால் கொடூரமாக தாக்கினர். இதை அவரது நண்பர்களான வன்னியர்பாளையம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ரேவந்த்(25), கம்மியம்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி(22), ஜீவானந்தம் (22) ஆகிய 3 பேரும் தடுத்தனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ரேவந்த், மூர்த்தி ஆகிய 2 பேரையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ரேவந்த், மூர்த்தி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமானோர் கூடினர். தொடர்ந்து இறந்த கண்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ரேவந்த், மூர்த்தி ஆகிய 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கண்ணனை தாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட உருட்டு கட்டை, கற்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
கண்ணனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள் யார்? பழிக்கு பழி கொலையா? எதற்காக கொலை செய்தார்கள்? என்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான கண்ணன் கடந்த 2020-ஆம் ஆண்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி காமராஜ் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர். இந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த கண்ணன், வெளியூரில் வேலை செய்து விட்டு, ஒரு துக்க நிகழ்ச்சிக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளார். இந்த சமயத்தில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஊருக்கு வந்துள்ளதை நோட்டமிட்டவர்கள் அவரை பழிக்கு பழியாக வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.