தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை தொடர்வதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியிருப்பதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி- பேசின் ப்ரிட்ஜ் இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி மைசூர் சூப்பர் பாஸ்ட் ரயில் ஆவடியில் இருந்தும், திருப்பதி விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும் எனவும், கோவை இன்டர்சிட்டி ரயில் ஆவடியில் இருந்தும், மும்பை சிஎஸ்டி ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இதனைத் தெரிவிக்க ஒரு உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.