புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி முத்துக்காடு ஊராட்சியில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக போலீசாரின் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, “வேங்கை வயல் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது. அத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார். முதலில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த குழுவின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் உடனடியாக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியிருக்கிறார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த மனித குல அவமானத்தை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இதுபோன்ற கொடுமைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தீவிரவாதத்தை தடுக்க எப்படி உளவுப்பிரிவு இருக்கிறதோ, அதேபோல் சாதி, மத பிரச்சனைகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தனி உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு சிந்திக்க விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். இரட்டைக் குவளை முறை அங்கொன்றும், இங்கொன்றுமாக நமக்கு வெளிச்சத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் பரவலாக இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. ஆகவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு முதல்வர் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க உத்தரவு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.