அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சோழன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன். இவருக்கு சொந்தமாக ஒரு ஜே.சி.பி இயந்திரம் உள்ளது. அந்த இயந்திரத்தை ஒரு வழக்கு சம்பந்தமாக கூவாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி இருவரும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து கலைவாணன், இது பொய்யான புகார் என்று தன்னுடைய தரப்பு விளக்கத்தை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து பொய்யான புகார் சம்பந்தமாக தனது ஜே.சி.பி. இயந்திரத்தை பறிமுதல் செய்தது தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகள் மனித உரிமை மீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறி கலைவாணன், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து மனித உரிமை ஆணைய நீதிபதி ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில், காவல்துறை எடுத்த நடவடிக்கை பொய்ப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டது. மேலும், கலைவாணனுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக அவருக்கு இழப்பீடாக அரசு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். அந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி இருவரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.