Skip to main content

கொலை உள்ளிட்ட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வசூர் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Rowdy Vasoor Raja, who is involved in 30 cases including murder, has been charged with thuggery
                                                                         வசூர் ராஜா

 

கொலை, கொள்ளை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வசூர் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே உள்ள புது வசூர் பகுதியைச் சேர்ந்த வசூர் ராஜா என்கிற துளசி கோவிந்தராஜன் (35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சேலம் கிச்சிப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிச. 22ஆம் தேதி ரவுடி செல்லத்துரை என்பவரைக் கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டிய வழக்கிலும் கும்பல் தலைவனாக செயல்பட்டார்.

 

சில மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். செல்லத்துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், ஏற்கனவே 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி வசூர் ராஜா மீது வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் போக்கிரித்தாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வேலூர், கடலூர், சேலம் மாவட்டங்களில் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹாரம் காவல் நிலையத்திலும் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

 

இந்நிலையில் வசூர் ராஜா, பிணையில் வெளியே வந்தால் அவர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் தெற்கு சரக காவல்துறை உதவி ஆணையர் மோகன்ராஜ், சேலம் மாநகர ஆணையர் நஜ்முல் ஹோதாவிற்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின்பேரில் ரவுடி வசூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஜூலை 20ஆம் தேதி உத்தரவிட்டார். இதற்கான கைது ஆணை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசூர் ராஜாவிடம் புதன்கிழமை (ஜூலை 21) சார்வு செய்யப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்