தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (19.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், தமிழகத்தில் காலை 10 மணி வரை10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். அதே போல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.