சேலையூர் அகரம் தென்பகுதியில் கிட்டத்தட்ட 1 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, பிரபல ரவுடி சீசிங் ராஜா உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் போலி ஆவணம் தயார் செய்து பட்டா மூலமாக கடந்த 2015ஆம் ஆண்டு 773 பேருக்கு விற்பனை செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கப்பட்ட வேண்டும் என அப்போதைய வி.ஏ.ஓ, அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில், 2023இல் நிலம் தொடர்பான பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த இடத்தை அரசு மீட்டது.
இந்த நிலையில், பிரபல ரவுடி சீசிங் ராஜா தான் இதற்கு மூளையாக செயல்பட்டார் என்று தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு தொடர்புடைய 14 இடங்களில் இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தனர். சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருந்த நிலையில், என்கவுன்டர் செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜா, 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி போலீசாரால் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.