கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி எரிக்க முயற்சி செய்தார்.
இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.